(ஆர்.ராஜா)
கிள்ளான், பிப். 25 - இங்குள்ள ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளியில் தமிழ் மற்றும்
இலக்கிய பாடங்களை வகுப்பு நேரத்திற்கு பிறகு நடத்தும் பள்ளி நிர்வாகத்தின்
நடவடிக்கையால் ஏற்பட்ட சர்ச்சைக்கு சுமூகமான முறையில் தீர்வு
காணப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வகுப்புகள் பள்ளி நேரத்திற்கு பிறகு நடத்துவதற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக இவ்விவகாரத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்ட கவலையைக் கருத்தில் கொண்டு பள்ளி
நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் கல்வி துணை அமைச்சர் வோங் காஹ் ஹோவின் சிறப்பு
அதிகாரி ஆகியோருடன் சந்திப்பு நடத்தப்பட்டது. செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தீவிர கவனம்
செலுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் மாநிலக் கல்வி துறை
ஆகியவற்றுடன் கூடுதல் ஆலோசனை நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு உகந்த ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது என்று என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
தமிழ் மற்றும் இலக்கிய வகுப்பு நேரே மாற்றப் விவகாரம் வெற்றிகரமாக
தீர்க்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு, மாணவர்களின் கல்வி தேவைகளை முன்னிலைப்படுத்தி,
பெற்றோர்களின் கவலைகளை ஆக்ககரமான முறையில் தீர்த்துள்ளது என்ற அவர்
குறிப்பிட்டார்.
இந்த பிரச்சனையைத் தீர்க்க உறுதியாக நடவடிக்கை எடுத்த கல்வித் துணை அமைச்சர் வோங் காஹ் ஹோ அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த தீர்வை செயல்படுத்த உதவிய ராஜா மஹாடி பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகம், மாநில மற்றும் மாவட்ட கல்வித் துறையினர் ஆகிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.


