கோலாலம்பூர், பிப். 25- மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும்
ஆட்சியாளர்கள் மன்றம் குறித்து பொய்யான தகவலை பதிவேற்றம்
செய்த குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு வரத் தவறிய
ஆடவர் ஒருவரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம்
(எம்.சி.எம்.சி.) காவல் துறையின் உதவியுடன் கைது செய்தது.
நேற்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கைது
ஆணையைத் தொடர்ந்து அவ்வாடவருக்கு எதிராக கைது நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக எம்.சி.எம்.சி. அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 24ஆம் தேதி திங்கள்கிழமை
நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கு எதிரான
வழக்கை எதிர்கொள்ள அந்த ஆடவர் நீதிமன்றம் வரவில்லை. தற்போது
காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆடவர்
விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று அது குறிப்பிட்டது.
அந்த ஆடவருக்கு எதிராக 1998ஆம் ஆண்டு தகவல் மற்றும் பல்லுடகச்
சட்டத்தின் 233(1(ஏ) பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படும். இப்பிரிவின் கீழ்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 50,000 வெள்ளி வரை அபராதம்
அல்லது ஓராண்டுச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அந்த ஆடவர் தனக்குச் சொந்தமான பேஸ்புக் வாயிலாக பொய்யானச்
செய்தியை பதிவேற்றம் செய்த தாக கூறப்படுகிறது.


