(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப். 24 - கோல சிலாங்கூர் வட்டாரத்திலுள்ள ஐந்து
தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பிரத்தியேக வீடமைப்புத்
திட்டத்தை ஏற்படுத்தி தந்ததன் மூலம் மக்களுக்கு தரமான குடியிருப்பு
வசதியை ஏற்படுத்தித் தரும் பொறுப்பினை மாநில அரசாங்கம்
நிறைவேற்றியுள்ளது என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்
பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.
மக்களுக்கு கட்டுபடி விலையில் தரமான வீடுகளை பெறுவதை உறுதி
செய்வதில் அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது
என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின்
அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது
அவர் இதனைக் கூறினார்.
ஹர்மோனி மடாணி பி.பி.ஆர். பெஸ்தாரி ஜெயா வீடமைப்புத்
திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பாதுகாப்பான மற்றும் வசதியான குடியிருப்புகளை உருவாக்கும் மாநில
அரசின் திட்டம் பெரும்பான்மையினராக உள்ள தரப்பினரை மட்டுமல்லாது
சிறுபான்மையினரான இந்தியர்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதை
நிரூபிக்கும் வகையில் இத்திட்ட அமலாக்கம் உள்ளது என அவர்
சொன்னார்.
இந்த வீடமைப்புத் திட்டத்தின் வழி மேரி தோட்டம், நைகல் கார்டனர்
தோட்டம், மின்யாக் தோட்டம், சுங்கை திங்கி, புக்கிட் தாகார்
தோட்டங்களைச் சேர்ந்த இந்தியர்கள் சொந்த குடியிருப்புகளைப்
பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு நான்கு கோடி வெள்ளியை
வழங்கிய வேளையில் சிலாங்கூர் அரசு 3 கோடியே 50 லட்சம்
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சுபிட்சம் பெறுவதிலும் அவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் மடாணி அரசாங்கம்
காட்டி வரும் அக்கறையை இது காட்டுகிறது என பிரகாஷ் தமது உரையில்
குறிப்பிட்டார்.


