கோலாலம்பூர், பிப். 24 - எதிர்வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தீமோர்-லெஸ்தே ஆசியானில் நிரந்தர உறுப்பினராக இணைவதற்கான வாய்ப்புள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தெரிவித்தார்.
ஆசியானின் நிரந்தர உறுப்பினராக தீமோர்-லெஸ்தே இணைவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த ஜாகர்த்தாவில் உள்ள ஆசியான் செயலகத்தில் ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆசியானின் முழு உறுப்பினர் பதவிக்கான திமோர்-லெஸ்தேவின் தொலை இலக்கை செயல்படுத்துவதற்கான நடைமுறைக்கு உதவுவதற்கும் பணிகளை எளிதாக்குவதற்கும் மலேசியா தீமோர்-லெஸ்தே பிரிவுக்கு 200,000 அமெரிக்க டாலரை பங்களிப்பாக வழங்கியதாக முகமது கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி கூறியிருந்தார்.
ஆசியானில் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் தீமோர்-லெஸ்தே இணங்க வேண்டிய 88 சட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றில் 69 பொருளாதார தூண்கள் என்றும் அவர் கூறினார்.


