புக்கிட் காயு ஹீத்தாம், பிப். 24 - மியான்மார் நாட்டில் உள்ள வாய்ப்பு மோசடிக் கும்பலின் வலையில் சிக்கிய 15 மலேசியர்கள் இன்று நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.
மேல் விசாரணை நடைமுறைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் அரச மலேசிய போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரையும் திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு இன்று ஒரு அறிக்கையில் அறிவித்தது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மியான்மார் அதிகாரிகளால் தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் உடனடியாக விரிவான தூதரக உதவியை அவர்களுக்கு வழங்கியதாக அது கூறியது.
தூதரகத்தின் இந்த உதவியில் தூதரக அதிகாரிகளின் வருகை, நெருங்கிய உறவினர்களைத் தொடர்புகொள்வது மற்றும் தற்காலிக பயண ஆவணங்களை வழங்குவது ஆகியவை அடங்கும்.
தாய்லாந்தின் தக் மாநிலத்திலிருந்து புக்கிட் காயு ஹீத்தாம் வரையிலான 25 மணி நேரப் பயணத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தூதரக அதிகாரிகள் உடன் சென்றதோடு போக்குவரத்து வசதிகளையும், உணவு மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் தூதரகம் வழங்கியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படை , மலேசிய குடிநுழைவுத் துறை மற்றும் சோங்க்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்பு அவர்களைத் திருப்பி அனுப்பும் முயற்சி வெற்றியடைவதற்குத் துணைபுரிந்தது.
மியான்மாரில் இருந்து மலேசிய குடிமக்களைப் பெறுவதற்கும் அவர்களைத் திருப்பி அனுப்பும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் தாய்லாந்து அரசாங்கம் அளித்த உதவிக்கு வெளியுறவு அமைச்சு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.


