ஷா ஆலம், பிப். 24 - விளையாட்டுத் துறையில் திறன் பெற்றவர்களை
இழக்காமலிருப்பதை உறுதி செய்ய விளையாட்டாளர்களுக்கான
அலவன்ஸ் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க மாநில அரசு
தயாராக உள்ளது.
விளையாட்டாளர்களுக்கான அலவன்ஸ் தொகை அளவு மாநில ரீதியில்
வேறுபடுவதால் விளையாட்டாளர்களை குறிப்பாக திறமை உள்ளவர்களை
கவர்ந்திழுப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று விளையாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
அலவன்ஸ் தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதை
நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். விளையாட்டுத் துறையின் மேம்பாட்டின்
மீது அதிக கடப்பாடு கொண்ட மாநிலங்கள் மற்ற மாநில
விளையாட்டாளர்களை கவர்ந்திழுக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அலவன்ஸ் தொகையை மறுஆய்வு செய்வதற்கான சாத்தியம் குறித்து
நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். விளையாட்டாளர்களை குறிப்பாக சிறந்த
அடைவுநிலையை வெளிப்படுத்துவோரை இழக்க நாங்கள்
விரும்பவில்லை என்று மாநில சட்டமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.
விளையாட்டாளர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதில் சிலாங்கூருக்கும்
மற்ற மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாடு குறித்து தாமான் மேடான்
உறுப்பினர் டாக்டர் அலிப் பஹாருடின் எழுப்பிய துணைக் கேள்விக்கு
பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, மாற்று திறனாளி விளையாட்டாளர்களும் சமமான
சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்ய அவர்களுக்கான அலவன்ஸ்
தொகையையும் மறுஆய்வு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அவர்
சொன்னார்.
மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கான அலவன்ஸ் தொகை
சம்பந்தப்பட்ட விவகாரம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சின் கீழ் உள்ளதால் இதில் நிர்வாக வேறுபாடு நிலவுகிறது என்றார்
அவர்.


