ஷா ஆலம், பிப். 24 - இங்குள்ள செக்சன் 19 முதல் செக்சன் 7 வரையிலான
தடத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மின்சார பஸ் (இ.வி.)
சேவையை மேற்கொண்டு வரும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின்
நடவடிக்கைக்கு மந்திரி புசார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 30 நிமிட
இடைவெளியில் நான்கு மின்சார பேருந்துகளைக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சேவை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக
விளங்குகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பயணிகள் மத்தியில் அதிக தேவை உள்ள காரணத்தால் இந்த தடத்தை
எம்.பி.எஸ்.ஏ. தேர்ந்தெடுத்துள்ளது. இந்த திட்டத்தை அடுத்த
மூன்றாண்டுகளுக்கு அமல்படுத்த மாநகர் மன்றம் 56 லட்சம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த மின்சார பேருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் டீசல்
பேருந்தைக் காட்டிலும் கிலோ கிராம் கரியமிலவாயு வெளியேற்றம்
தினசரி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள செக்சன் 19, இறுதி பஸ் நிறுத்த த்தில் இ.வி. பேருந்து
சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்வில் மந்திரி புசார் இதனைத்
தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் செலவினத்தைக் குறைக்கும் வகையிலும்
உள்ள காரணத்தால் இந்த மின்சார பேருந்து சேவையை சிலாங்கூர்
பெருவழி கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு விரிவுபடுத்த தாங்கள்
திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசு கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்
சேவையைத் தொடக்கியது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் உள்ள 60 தடங்களில் 164 பேருந்துகள் இயக்கப்பட்டு
வருகின்றன.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் கார்பன் இல்லா நகராகப் பெட்டாலிங்
ஜெயாவை உருவாக்கும் நோக்கில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்
கடந்தாண்டு முதல் பரீட்சார்த்த முறையில் இரு மின்சார பேருந்துகளை
சேவையில் ஈடுபடுத்தி வருகிறது.


