கோலாலம்பூர், பிப். 24 - கல்விக் கடனைத் திரும்ப வசூலிப்பது தொடர்பான
செயல்முறையை தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (பி.டி.பி.டி.என்.) மறுஆய்வு செய்ய வேண்டும் என்பதோடு அந்த கழகத்தின் கல்விக் கடன் மேலாண்மை மீதான கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கடன் பெற்ற 12 பேரை
உட்படுத்திய திரும்பச் செலுத்தப்படாத கடன் தொகை 1,085 கோடியே 30
லட்சம் வெள்ளியாக இருந்தது என 2023ஆம் ஆண்டிற்கான கூட்டரசு
நிறுவனங்களின் நிதி நிலைமை மீதான தேசிய தலைமைக்
கணக்காய்வாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடனைத் திரும்பச் செலுத்துவோரின் நிலுவைத் தொகையும் கடந்த 2019-
2023 காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வாளர்
டத்தோஸ்ரீ வான் சுராயா வான் முகமது ராட்ஸி அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
தேசிய கணக்காய்வாளரின் 1/2025 அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு அவர் இந்த அறிக்கையை
வெளியிட்டுள்ளார்.
ஐந்து உயர்கல்விக் கூடங்களை உட்படுத்திய அடிப்படை ஆராய்ச்சி நிதி மேலாண்மை (டி.பி.எஃப்.) அமலாக்கம் குறித்து பேசிய வான் சுராயா, திட்டமிடல் மற்றும் கே.பி.ஐ. எனப்படும் அடைவு நிலைக்கான குறியீடு அடையப்படுவதை உறுதி செய்ய அத்திட்டம் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியமாகிறது என்றார்.
அந்த டி.பி.எஃப். ஆராய்ச்சித் திட்டத்தின் மேம்பாடு திருப்திகர அளவை விட குறைவாக (53.9%) உள்ளதை கணக்காய்வு அறிக்கை காட்டுகிறது. அமல்படுத்தப்பட்டத் திட்டங்களில் 7.3 விழுக்காடு மட்டுமே சிறப்பான நிலையில் உள்ளதோடு 7.3 விழுக்காட்டு திட்டங்கள்
பிரச்சனைக்குரியவையாக காணப்படுகின்றன என்றார் அவர்.


