கோலாலம்பூர், பிப். 24 - ‘டத்தோ‘ அந்தஸ்து கொண்ட நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட 638,205 வெள்ளி பங்கு முதலீட்டு மோசடிப் புகார் தொடர்பில் போலீசார் 15 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் கடந்த வியாழக்கிழமை வரை நிறுவனம்
ஒன்று சம்பந்தப்பட்ட 13 லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை
உட்படுத்திய 32 புகார்களை தாங்கள் பெற்றுள்ளதாகப் புக்கிட் அமான்
வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது
யூசுப் கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கப்பட்ட அந்த
நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ‘டத்தோ‘ உள்பட இருவர் இயக்குநர்களாக
உள்ளனர். அந்த டத்தோ கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி
அந்நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அனைத்து புகார்களும் குற்றவியல் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக பெர்னாமா தொடர்பு கொண்ட
போது அவர் சொன்னார்.
அந்த நிறுவனம் 69 லட்சம் வெள்ளி செலுத்தப்பட்ட மூலதனத்தைக்
கொண்டுள்ளதோடு 175 தனிநபர்கள் மற்றும் நான்கு நிறுவனங்களை
உள்ளடக்கிய 179 பங்குதாரர்களையும் கொண்டுள்ளதை மலேசிய நிறுவன
ஆணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் காட்டுகின்றன என அவர்
கூறினார்.
இந்த மோசடி தொடர்பில் இதுவரை 15 விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டுள்ளன. அவர்களில் 11 பேர் பதிவு பெற்ற பங்குதாரர்களாக
உள்ளனர் என்றார் அவர்.
சுமார் 25 லட்சம் வெள்ளி பங்கு முதலீட்டு இழப்பு தொடர்பில் டத்தோ
ஒருவருக்கு எதிராக 65 பேர் மலேசிய அனைத்துலக மனிதாபிமான நேற்று
முன்தினம் அமைப்பிடம் புகார் அளித்திருந்தனர்.


