லங்காவி, பிப். 24 - பினாங்கு மாநிலத்தில் மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்ததாகக் கூறப்படும் கண் வடிவிலான ஜவ்வு மிட்டாய்கள் விற்பனை தொடர்பான விளம்பரங்களை நீக்குமாறு சுகாதார அமைச்சு இரண்டு இணைய விற்பனை தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்தகைய தயாரிப்பு பொருள்களை விளம்பரப்படுத்தும் இரண்டு தளங்களில் உள்ள 86 விளம்பர இணைப்புகளை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்லி அகமது தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது அந்த 'கம்மி' மிட்டாய்களை விற்பனை செய்யும் விளம்பரத்தை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தளத்திற்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
அதே சமயம், வர்த்தக வளாகங்களில் நேரடி அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அங்கு தொடர்ந்து விற்கப்படும் பொருட்களை பறிமுதல் செய்வோம் என்று லங்காவியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, அனைத்து இணையத் தளங்களிலும் உள்நாட்டு சந்தைகளிலும் கண் வடிவ ஜவ்வு அல்லது கம்மி மிட்டாய் பொருட்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
சம்பந்தப்பட்டத் தயாரிப்புகள் 1985ஆம் ஆண்டு உணவு விதிமுறைகள் (பி.பி.எம்.) மற்றும் 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் [சட்டம் 281] கீழ் வழங்கப்பட்ட லேபிளிங் நிபந்தனைகளை மீறும் வகையில் உள்ளது கண்டறிந்துள்ளதாக அது குறிப்பிட்டது.
கம்மி எனும் ஜவ்வு மிட்டாயை உட்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக நான்காம் வகுப்பு மாணவரான முகமது ஃபாஹ்மி ஹபீஸ் முகமது ஃபக்ருடின் பினாங்கு மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


