ரமல்லா, பிப். 24- மேற்கு கரையின் வட பகுதியில் தாக்குதலைத்
தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஜெனின் நகரைச்
சுற்றி கவச வாகனங்களை அனுப்பியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு
தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டுப் படைகள் மேற்கொள்ளும் முதலாவது
ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இது விளங்குகிறது.
அப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை
புலப்படுத்தும் விதமாக இந்நடவடிக்கை விளங்குகிறது என்று பாலஸ்தீன
செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.
இதனிடையே, இந்த இராணுவ நடவடிக்கை அதிகரிப்பை அறிக்கை
ஒன்றின் வாயிலாக உறுதிப்படுத்திய இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர்
காய்ட்ஸ், அகதிகள் முகாமில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கும்,
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளை
நிறுத்துவதற்கும் மக்கள் மீண்டும் தங்கள் குடியிருப்புகளுக்குத்
திரும்புவதைத் தடுப்பதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
என்றார்.
மேற்கு கரையின் வட பகுதியில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ஜெனின், துல்கர்ம், நாவ்ர் ஷாம்ஸ் மற்றும் அல்- ஃபாரா அகதிகள் முகாமிலிருந்து 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜெனின் மற்றும் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் 34வது நாளாக
மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாகக் குறைந்தது 27 பேர்
பலியாகியுள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல்களில் 120 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு எண்ணற்ற வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.


