கோலாலம்பூர், பிப். 24 - முறையான அனுமதியின்றி பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெயரிலும் ஜோகூர் அரச குடும்பத்தின் படங்களை பயன்படுத்தியும் திறக்கப்பட்டுள்ள போலி சமூக ஊடகக் கணக்குகள குறித்து ஜோகூர் அரச ஊடக அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் நேற்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியான ஒரு பதிவில் பகிரப்பட்டது. போலியான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) கணக்கின் ஸ்கிரீன்ஷாட்டும் அப்பதிவில் பகிரப்பட்டது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் போலி சமூக ஊடக கணக்குகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனென்றால், இத்தகைய போலி கணக்குகளைத் திறப்பவர்கள் பெரும்பாலும் முகநூல் மற்றும் பிற சமூக ஊடக தளங்களை மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றனர் என்று அது கூறியது.
ஆள்மாறாட்டம் மற்றும் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல்கள் சட்டப்படி குற்றம் என்பதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோகூர் அரச ஊடக அலுவலகம் எச்சரித்தது.
முன்னதாக, மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஜரித் சோபியாவின் பெயரைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் எழுந்தது.


