ஈப்போ, பிப். 24- பங்கோர் தீவில் ஹோம் ஸ்டேய் எனப்படும் தற்காலிக வாடகை வீட்டிலிருந்து செயல்பட்ட இணைய வழி வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 26 முதல் 41 வயது வரையிலான 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 13 சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் இசாம் நோர்டின் கூறினார்.
அந்த கும்பலுக்கு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து தந்ததோடு அவர்களுக்கு தேவையான உணவையும் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 61 மற்றும் 63 வயதுடைய தம்பதியரும் இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்டு இணைய வழி வேலை வாய்ப்பு மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 15 பேர் கொண்ட அக்கும்பல் அந்த வீட்டை தளமாகப் பயன்படுத்தியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது சுமார் 80,000 வெள்ளி மதிப்புள்ள 12 மடிக்கணினிகள், ஆறு வைஃபை மோடம்கள், 88 கைபேசிகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகப்பேர்வழிகளும் இம்மாதம் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 120(பி) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களின் குடிநுழைவு அந்தஸ்தை உறுதிப்படுத்த குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்


