குளுவாங், பிப். 23- ஒரு கார் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து கோத்தா திங்கி-குளுவாங் சாலையின் 84வது கிலோ மீட்டரில் நேற்று பின்னிரவு12.45 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் தலை, மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக அரிப் ஜைடி ஜைனுடின், (வயது 20) மற்றும் நுர் அஸ்ரின் நஜ்வா ஜைனுரிஸாம் (வயது 25) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது 48 வயது ஆடவர் ஒட்டிச் சென்ற நிசான் செரினா ரக வாகனம் குளுவாங்கிலிருந்து கோத்தா திங்கி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் அந்த நான்கு மோட்டார் சைக்கிள்களும் கோத்தா திங்கியிலிருந்து குளுவாங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில் நுழைந்து நிசான் செரினா வாகனத்துடன் மோதியுள்ளது. அதே சமயம் இதர இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு எதிர்த்தடத்தில் விழுந்தன என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட16 மற்றும் 17 வயதுடய இதர இரு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. காரோட்டியும் காயங்கள் இன்றி உயிர்த்தப்பினார் என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


