பாங்கி, பிப். 23- வர்த்தக நாடு என்ற முறையில் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல வளரும் நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக புதிய இடங்களையும் வழிகளையும் திறக்க மலேசியா தயாராக உள்ளது.
தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள், அனைத்துலக உறவு வியூகங்களுக்கேற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிச்சயமாக, சில எண்கள் ஊக்கமளிக்கின்றன. ஆனால் சில சிக்கல்களை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதோடு திட்டக் கண்ணோட்டத்தில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
முதலாவதாக, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் தலைமையுடனான உறுதியற்ற தன்மை, புவிசார் அரசியல் அழுத்தம், ஐரோப்பா, சீனாவின் எதிர்வினைகள் மற்றும் காஸா (பாலஸ்தீனம்) மற்றும் உக்ரேன் (போரின்) சமீபத்திய மேம்பாடுகள் அவையாகும் என்று அவர் தெரிவித்தார்.
மடாணி 2025 அரசாங்க அமைச்சரவை கலந்துரையாடல் செய்தியாளர் சந்திப்பில் அன்வார் இவ்வாறு கூறினார். இதில் துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதற்கும் வளரும் நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் மலேசியா சுயேச்சைக் கொள்கையை வலியுறுத்துவதாக அன்வார் கூறினார்.
அது தவிர, செயல்படுத்தப்பட வேண்டிய மற்றும் வலுப்படுத்தப்பட வேண்டிய தற்போதைய தேசியக் கொள்கைகள் குறித்தும் இந்த உடன்பாடு விவாதித்ததாக அவர் சொன்னார்.
நாட்டின் திட்டமிடப்பட்ட திசையின் வளர்ச்சியைப் பற்றி விவாதிப்பதற்காக இரண்டு நாள் தீர்வு நிகழ்வு தொடங்கியது. மக்களின் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு அமைச்சரவையின் பணி செயல்திறனை மதிப்பிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் இது ஒரு தளமாக விளங்குகிறது.


