ஜோர்ஜ் டவுன், பிப். 23- போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணையை தடுத்து நிறுத்துவதற்காக 3,000 வெள்ளியை லஞ்சமாகப் கோரியதோடு பெற்றதாகவும் கூறப்படும் மாநிலத்தைச் சேர்ந்த இரு அமலாக்க அதிகாரிகள் ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசியா ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் ஷியாஹிரா அப்துல் சலிம் முப்பது வயது மதிக்கத்தக்க அவ்விரு அமலாக்க அதிகாரிகளுக்கும் எதிரான தடுப்புக் காவல் அனுமதியை வழங்கினார்.
கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட முதலாவது அதிகாரிக்கு எதிரான தடுப்புக் காவல் நேற்று முன்தினம் தொடங்கி வரும் 25ஆம் தேதி வரையிலும் இரண்டாவது சந்தேகப் பேர்வழிக்கு எதிரான தடுப்புக் காவல் வரும் 26ஆம் தேதி வரையிலும் அமலில் இருக்கும் என எம்.ஏ.சி.சி. வட்டாரங்கள் கூறின.
அவ்விரு சந்தேகப்பேர்வழிகளும் கூட்டாகச் சேர்ந்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது. போதைப் பொருள் வழக்கை மூடி மறைப்பதற்கு பிரதியுபகாரமாக 3,000 வெள்ளி லஞ்சத் தொகைப் பேசப்பட்டு முன்பணமாக 1,800 வெள்ளி வழங்ப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய பினாங்கு மாநில எஸ்.பி.ஆர்.எம். இயக்குநர் டத்தோ புவாட் பீ பாஸ்ரா, இந்த புகார் தொடர்பில் 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


