கோலாலம்பூர், பிப். 23 - நாட்டில் மிகவும் வறிய நிலையை ஒழிப்பதற்கான முயற்சிகள் அதிவேகத்தில் முன்னெடுக்கப்பட்டு மிகவும் தீவிரமாகத் தொடரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
வறுமையின் பிடியிலிருந்து மேலும் அதிகமான மக்கள் விடுபட்டு சிறந்த, கண்ணியமான மற்றும் வளமான வாழ்க்கையை அனுபவிப்பதை காண அரசாங்கம் விரும்புவதாக அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, கண்ணியம் மற்றும் சமூக நீதி சார்ந்த பிரச்சினையும் கூட. அதனால்தான் மக்கள் தொடர்ந்து வறுமையால் வாடுவதை மடாணி அரசாங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன்.
விரிவான கொள்கைகள் மற்றும் இலக்கு உதவித் திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த அடிமட்ட முயற்சிகள் வாயிலாக உண்மையாக தேவை உள்ளவர்களுக்கு உதவுவதையும் வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட செபராங் ஜெயா, பெனாந்தி மற்றும் பெர்மாத்தாங் பாசீர் ஆகிய இடங்களில் உள்ள குடும்பங்களுக்கு தனது அரசியல் செயலாளர் டத்தோ அகமட் ஃபர்ஹான் பவுஸி நேற்று முன்தினம் உதவிகளை வழங்கினார் என்று அன்வார் குறிப்பிட்டார்.
இறைவன் அருளால் 221 குடும்பங்கள் பரம ஏழ்மையிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. தேவைப்படுபவர்களுக்கு உதவ மடாணி அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் உரிய பலனை அளிக்கின்றன என்பதற்கான உறுதியான சான்றாகும் என்றார் அவர்.
இந்த முன்னெடுப்பு தற்காலிக அடிப்படையில் உதவி வழங்குவதை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல. மாறாக, ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவும் சிறந்த வேலைவாய்ப்பும் பெறுவதையும் இறுதியில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று அன்வார் வலியுறுத்தினார்.
எனவே, தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த உன்னத முயற்சியில் கைகோர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்
வலுவான ஒற்றுமை மற்றும் உணர்வு மலேசியா ஆகியவை அனைவருக்கும் மிகவும் நீதியான மற்றும் வளமான நாடாக மலேசியா மாறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார் அவர்.


