கோலாலம்பூர், பிப். 21- வடகிழக்கு பருவமழை 2024/2025 வெள்ளப் பேரிடர் பருவத்தில் பல்வேறு தரப்பினர் நன்கொடையாக வழங்கிய சுமார் மூன்று கோடியே ஐம்பது லட்சம் வெள்ளி மதிப்புள்ள 650 டன் உதவிப் பொருட்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
விநியோகிக்கப்பட்ட பொருட்களில் சுயப் பயன்பாட்டுப் பொருட்கள் தூய்மைப் பொருட்கள், ரொக்க நிதியுதவி மற்றும் பள்ளிக்கான உதவிப் பொருட்களும் அடங்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) தலைமை இயக்குநர் டத்தோ கைரில் ஷாஹ்ரில் இட்ருஸ் கூறினார்.
இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதில் மாவட்ட மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை செயல் குழுக்கள், அரச மலேசிய ஆகாயப்படை, ஜி.எல்.சி. டெமி ராக்யாட் டான் நெகாரா, ஏஹ்சான் ஜோகூர், யாயாசான் பூட்பேங்க் மலேசியா, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் பேருதவி புரிந்ததாக அவர் சொன்னார்.
இந்த உதவிப் பொருட்கள் யாவும் பல கட்டங்களில் அனுப்பப்பட்டன. குறிப்பாக, சபா மற்றும் சரவாக்கில் வான் போக்குவரத்து பயன்படுத்தப்பட்டது. உதவிப் பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அரசு சாரா அமைப்பு வழங்கிய எட்டு டன் எடை கொண்ட சமைத்த உணவுப் பொட்டலங்களும் 47 டன் அத்தியாவசிய உதவிப் பொருட்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்றார் அவர்.
விவேக பங்காளி என்ற முறையில் ராக்கான் நட்மா அமைப்பு உதவிப் பொருட்கள் தொடர்பான மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டது. உதவிப் பொருட்களின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்ட தரப்பினருடன் நட்மா ஒருங்கிணைப்பை மேற்கொண்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.


