கோலாலம்பூர், பிப் 20 – தேசிய ஸ்குவாஷ் விளையாட்டாளர் எஸ்.சிவசங்கரி உலகத் தர வரிசையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இச்சாதனையின் மூலம், 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் விளங்குவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 2028-ஆம் ஆண்டில், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதன் முறையாக ஸ்குவாஷ் இடம் பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இளம் வயதில் உலக அளவில் ஏழாவது மிகச் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையாக உயர்ந்திருப்பது, இவ்வளவு காலமும் தான் போட்ட கடும் உழைப்புக்கான பிரதிபலன் என சிவசங்கரி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, ஆட்டத்தின் தரத்தை மேம்படுத்தி தர வரிசையில் தொடர்ந்து முன்னேற அவர் உறுதிபூண்டுள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி (Cincinnati) கிண்ண ஸ்குவாஷ் போட்டியில் 25 வயதான சிவசங்கரி வாகை சூடினார்.
ஸ்குவாஷ் உலகில் முக்கியப் போட்டிகளில் ஒன்றாகும். அதில் வெற்றிப் பெற்றது சிவசங்கரியின் அர்ப்பணிப்பு மற்றும் நிலையான ஆட்டத் தரத்திற்கான சான்றாகும்.
சிவசங்கரியின் முன்னேற்றத்தைப் பார்க்கும் போது, தேசிய ஸ்குவாஷ் சகாப்தம் டத்தோ நிக்கோல் டேவிட்டின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, ஒரு நாள் உலகின் முதல் நிலை ஸ்குவாஷ் வீராங்கனையாக அவர் வருவார் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாண்டு தனது இரண்டாவது வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அடுத்த மாதம் நியூசிலாந்து பொது விருது மற்றும் ஆஸ்திரேலியா பொது விருது போட்டிகளில் சிவசங்கரி களமிறங்குவார்.


