கோலாலம்பூர், பிப் 20 - தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி (டிவெட்) பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதம் சராசரியாக 94.5 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இதன் மூலம் திறன்மிக்க தொழிலாளர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மாராவின் கீழ் செயல்படும் டிவெட் மையங்களின் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு 98.7 விழுக்காடாக உள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கடந்தாண்டு டிவெட் திட்டத்தில் 423,000 பேர் இணைந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதற்கு முந்தைய ஆண்டு அதன் எண்ணிக்கை 407,000-ஆக இருந்ததாக விளக்கினார்.
தேசிய டிவெட் கொள்கை 2030-இன் கீழ், தொழில்துறை தேவைகளின் அடிப்படையில் நிறுவனங்கள் மற்றும் பாடத்திட்டங்களை வலுப்படுத்துதல், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் டிவெட் பட்டதாரிகள் வேலை சந்தையில் போட்டித்தன்மையுடன் இருத்தல் போன்ற முயற்சிகளை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாகவும் டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.


