(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப். 20 - நாட்டிலுள்ள இளைஞர்கள் குற்றச் செயல்களுக்கு
எதிராக குறிப்பாக போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக எப்போதும்
விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மனித வளம் மற்றும் வறுமை
ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு
வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு
மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய இளைஞரான
பன்னீர் செல்வம் பரந்தாமனின் வழக்கை சுட்டிக்காட்டிய அவர், தெரிந்தோ
தெரியாமலோ செய்யக்கூடிய இத்தகைய குற்றங்கள் தங்களை மரணத்தின்
விளம்புக்கே கொண்டுச் செல்லும் என்பதோடு குடும்பத்தையும்
நிர்க்கதியாக்கிவிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என அவர்
கூறினார்.
தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது பெற்றோர் அதிக கவனம்
செலுத்துவதன் மூலமாகவும் போதைப் பொருள் கடத்தில் ஈடுபடும் பெரும்
கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையை அமலாக்கத் தரப்பினர்
வலுப்படுத்துவதன் வாயிலாவும் இளம் தலைமுறையினர் போதைப்
பித்தர்களாகவும் போதைப் பொருள் விநியோகிப்பாளர்களாகவும் மாறி
எதிர்காலத்தை சீரழித்து விடும் அபாயத்தை தடுக்க முடியும் என்றார்
அவர்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பெரும் முதலைகள்
தப்பித்துக் கொள்ளும் வேளையில் பன்னீர் செல்வம் போன்ற சிறு
நெத்திலிகள் மட்டுமே சட்டத்தின் வலையில் சிக்கிக் கொள்கின்றன.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் மூளையாகச் செயல்படுவோரை
துடைத்தொழித்தால் மட்டுமே நாட்டின் எதிர்காலச் சொத்தாக விளங்கும்
இளைஞர்களை போதை பொருள் அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும்
என அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு கட்டாய
மரண தண்டனை விதிக்கும் சட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு சில
திருத்தங்கள் செய்யப்பட்டு நீதிபதியின் விவேகத்திற்கு உட்பட்டு தண்டனை
விதிக்க வகை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பாப்பராய்டு, எனினும்,
சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து இத்தகைய குற்றங்களுக்கு எதிராக
கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பல்களின்
நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு மலேசியாவும் சிங்கப்பூரும்
ஒருங்கிணைந்த விவேக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும்
அவர் தெரிவித்தார்.
நமது நாட்டைப் பொறுத்த வரை, இளைஞர்களுக்கு குறிப்பாக இந்திய
சமூகத்தைச் சேர்ந்த எதிர்காலத் தலைமுறையினருக்கு நான் கூறும்
ஆலோனை என்னவென்றால் சட்டத்திற்கு புறம்பான எந்த
நடவடிக்கையிலிருந்தும் விலகியிருங்கள் என்பதுதான்.
கூடா நட்பு மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்படுவது
போன்றவை பல சந்தர்ப்பங்களில் நம்மை பாழும் கிணற்றில் தள்ளிவிடும்.
தன்மானமும் தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட சமூகமாக நாம்
மாற வேண்டும். அதற்கு தீய எண்ணங்கள் நம்மை அண்டாதிருப்பதை
உறுதி செய்ய வேண்டும்.
மனித வளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் நமது
இளைஞர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கு ஏதுவாக
வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான திட்டங்களை
அமல்படுத்தி வருகிறேன்.
நாடு முழுவதும் நடத்தி வரும் நடத்தி வரும் இத்தகைய வேலை
வாய்ப்புச் சந்தைகள் மூலம் முன்னாள் கைதிகளும் வேலைகளைப் பெற்று
சமுதாயத்தில் சிறந்த குடிமகன்களாக மாறுவதற்கான வாய்ப்பினையும்
ஏற்படுத்தித் தருகிறோம் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.


