ஷா ஆலம், பிப். 20 - அந்நிய நாட்டினர் குறிப்பாக இந்நாட்டில் தங்கி
வேலை செய்ய விரும்புவோர் மத்தியில் போலி அடையாள அட்டைகளுக்கு
அதிக கிராக்கி ஏற்படுள்ளது.
இத்தகைய போலி அடையாள அட்டைகள் 5,000 வெள்ளி வரையிலான
விலையில் விற்கப்படுவது தேசிய பதிவுத் துறை மேற்கொண்ட உளவு
நடவடிக்கையின் வாயிலாக தெரிய வந்துள்ளதாக துணை உள்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார் நசாரா கூறினார்.
போலி அடையாள அட்டைகள் 4,000 முதல் 5,000 வெள்ளி விலையில்
தயாரிக்கப்படுவது நாங்கள் மேற்கொண்ட உளவு நடவடிக்கையில் தெரிய
வந்துள்ளது. இங்கு வேலை செய்ய விரும்பும் சட்டவிரோதமாக
தங்கியுள்ள அந்நிய நாட்டினர் மத்தியில் இந்த அடையாளக் கார்டுகளுக்கு
அதிக கிராக்கி உள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த உளவு நடவடிக்கையின் விளைவாக அரச மலேசிய காவல் துறை
மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்தின் உதவியுடன்
ஜே.பி.என். அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று போலி அடையாள அட்டைகள் பிரச்சனைக்குத் தீர்வு
காண அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மஸ்ஜிட் தானா
தொகுதி உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
போலி அடையாளக் கார்டுகள் தொடர்பில் கடந்த 2020 முதல் 717 பேர்
கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களில 320 பேர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டது என்றார் அவர்.
போலி அடையாள அட்டைகள் மற்றும் பிறருக்குச் சொந்தமான
அடையாள அட்டைகள் வைத்திருந்ததும் இதில் அடங்கும்.
அமலாக்கத்தைப் பொறுத்த வரை நாங்கள் எப்போதும் உறுதியான
நடவடிக்கைளை எடுத்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.


