ஷா ஆலம், பிப். 20 - கோலாலம்பூர்-காராக் விரைவுச்சாலையின் விரிவாக்கப் பணிகளுக்கு அரசாங்க ரிசர்வ் நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் இத்திட்டத்தில் தனியாருக்கு சொந்தமான வீடுகள் பாதிக்கப்படாது என்று உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ள இத்திட்டம் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்காமல் நடப்பு தடத்தையொட்டி மேற்கொள்ளப்படும் என்று அவர்
இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.
இந்த சாலை விரிவாக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணி ரிசர்வ் நிலத்தை
மட்டுமே உள்ளடக்கியிருக்கும். கூடுதல் நிலம் பயன்படுத்தப்படாது என்றார்
அவர்.
அந்த திட்டத்தை அமலாக்குவதாக இருந்தால் இதர வெள்ளத் தடுப்புத் திட்டங்களைப் போல் ஏற்கனவே நுழைந்த பகுதிகளில் புதிய தடத்தை அமைப்போம் என்பது இதன் பொருளாகும் என்று மாநில சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது இஷாம் கூறினார்.
குடியேற்றப் பகுதிகள் மற்றும் நில ஆக்கிரமிப்பை கையாள்வது குறித்து கருத்துரைத்த இஷாம், சுங்கை பெலாம்பாஸ் மற்றும சுங்கை கெண்டோண்டோங்கில் உள்ள நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாமலிருப்பதற்கு ஏதுவாக அதிகாரிகள் சட்ட விதிகளை
முறையாகப் பின்பற்றுவர் என்றார்.
சட்ட விதிகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்பதன் காரணமாகவே நீர் விநியோகம் உள்ளிட்ட பல அடிப்படை வசதி திட்ட அமலாக்கத்தில் தாமதம் ஏற்படுகிறது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் இந்த நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் பாதிக்கப்பட்ட நிலங்கள் கூட்டரசு நில ஆணையர் மற்றும் மாநில வள இலாகாவுக்கு சொந்தமானவையாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.


