கோலாலம்பூர், பிப் 20 - நாட்டில் 2025/2026ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளித் தவணை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் பதிவு குறித்து மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தவணையில் 11,712-ஆக இருந்த முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை, 2025/2026ஆம் ஆண்டில் 11,021-ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 526 தமிழ்ப்பள்ளிகள் செயல்படும் வேளையில் முதலாம் ஆண்டு மாணவர்களின் குறைந்த அளவிலான பதிவானது, தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவைச் செயலாளர் முனைவர் குமரன் வேலு இராமசாமி பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.
பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் பாதுகாவலரிடம் தமிழ்ப்பள்ளி மீதான பற்று குறைந்திருக்கும் காரணத்தினால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டுள்ளதாகப் பலரும் நினைக்கின்றனர்.
உண்மையில் இந்தியர்களின் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருவதே இதற்கான அடிப்படைக் காரணம் என்று விவரித்த முனைவர் குமரன் வேலு, தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி சீனப் பள்ளிகளிலும் இதே நிலைமை நீடிப்பதாகக் கூறினார்.
இதனிடையே, மலாய் மற்றும் சீனப்பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மற்றும் அனைத்துலக பள்ளிகளிலும் ஆண்டுதோறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது.
இது வருத்தமளிக்கும் தகவலாக இருப்பினும், மற்ற மொழிப் பள்ளிகளைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளில், இவ்வாண்டு இந்திய மாணவர்கள் அதிகமாக முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளது, தாய்மொழி பள்ளிகள் மீது பெற்றோர் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என முனைவர் குமரன் வேலு குறிப்பிட்டார்.
"இதற்கு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுடன் தமிழ்ப்பள்ளிகளில் கல்வித் தரம் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கும் மாணவர்களை சிறந்த கல்வியறிவாளர்களாக உருமாற்றுவதற்கு பள்ளி நிர்வாகத்தினர் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்," என்றார் அவர்.
குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளின் மகத்துவத்தை அறிந்து பல பெற்றோர், பிற மொழிப் பள்ளிகளில் சேர்த்த தங்களின் பிள்ளைகளை மீண்டும் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றியிருப்பது அவர்களின் மாறுதலைப் புலப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
அதோடு, தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேசிய மொழியில் உரையாடுவதிலும், எழுதுவதிலும் பின்தங்கி இருக்கின்றனர் என்ற பிம்பத்தை உடைக்கவும் தமிழ்ப்பள்ளிகள் முனைய வேண்டும் என்று அவர் ஆலோசனைக் கூறினார்.
அனைத்துலக பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஈடாக, தமிழ்ப்பள்ளிகளும் கல்வி, வளர்ச்சி மற்றும் புத்தாக்க சிந்தனையில் முன்னேற்றம் கண்டால், எதிர்வரும் ஆண்டுகளில் வகுப்பறைகள் பற்றாத அளவிற்கு மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என்று முனைவர் குமரன் வேலு நம்பிக்கைத் தெரிவித்தார்.


