மனாமா, (பாஹ்ரின்) பிப். 20 - நாட்டின் தோற்றத்தை உலக நாடுகள்
மத்தியில் கட்டிக்காப்பதில் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் முக்கிய
பங்கினை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நற்பெயரை கட்டிக்காப்பதில் தூதரகங்கள்
மேற்கொள்ளும் முயற்சிகள் தவிர்த்து வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் தோற்றமும் நடத்தையும் முக்கியமானதாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.
அதே சமயம், நாட்டை வெளிநாட்டினர் மத்தியில் பிரபலப்படுத்துவதில்
கூட்டு முயற்சிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.
மலேசியா மற்றும் அதன் சுற்றுலா குறித்து குறிப்பாக, தனித்துவங்களைக்
கொண்ட கோத்தா கினபாலு, பினங்கு, கிளந்தான் பற்றி நாம் தீவிரப்
பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற புலம் பெயர்ந்த மலேசியர்களுடனான இரவு
விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது பிரதமர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் சுமார் 300 மலேசியர்கள் கலந்து கொண்டனர்.
பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் பின் ஹமாட் அல்
கலிபாவின் அழைப்பை ஏற்று வளைகுடா நாடான பாஹ்ரினுக்கு தனது
முதலாது அதிகாரப்பூர்வ வருகையை பிரதமர் நேற்று முன்தினம்
மேற்கொண்டார்.
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் நாட்டின் நலன் குறித்து
எப்போதும் சிந்திக்க வேண்டும் எனவும் அன்வார் தமது உரையில்
வலியுறுத்தினார்.
துடிப்புமிக்க கலாச்சாரம், பல இன மற்றும் சமயங்களைக் கொண்ட
மலேசியா பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்
உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


