புத்ராஜெயா, பிப் 20 - தற்போது கூட்டரசு பிரதேசங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் 12 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும். முன்பு இந்த கால அவகாசம் 24 மணி நேரமாக இருந்ததாகக் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாஃபா குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையானது, 3 கூட்டரசு பிரதேசங்களிலும், குறிப்பாக கோலாலம்பூர் சாலைகளில் குழிகள் இருக்கவே கூடாது என்ற கொள்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைப் பயனர்களின் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியமானது.
மேலும், இவ்வாண்டு மலேசியா ஆசியானின் தலைமைத்துவத்தை ஏற்பதாலும், அடுத்தாண்டு ‘மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’க்குத் நாடு தயாராகி வருவதாலும் இந்த நடவடிக்கை முக்கியமானதாகக் கருத்தப்படுகிறது என அமைச்சர் சொன்னார்.
நகர்ப்புற பராமரிப்பு சிக்கல்களை ஆக்கப்பூர்வமாகக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதில், AI எனும் அதி நவீன தொழில்நுட்பத்தையும் நிகழ்நேர கண்காணிப்பையும் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் சம்பவ இடத்திற்கு அதிகாரத் தரப்பு விரையும் நேரத்தை குறைக்க முடியும் என்று சாலிஹா நம்பிக்கை தெரிவித்தார்.
சாலை குழிகள் தொடர்பான புகார்களை மாநகரவாசிகள் Adu@KL அல்லது KL Strike Force நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு புகார் பிரிவுகள் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.


