சுபாங் ஜெயா, பிப் 20 - உச்ச நேரத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு கனரக வாகனங்களுக்கான தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று காலை கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் 30% குறைந்துள்ளது.
இன்று தொடங்கி குறிப்பிட்ட சில நெடுஞ்சாலைகளில் சாலையைப் பயன்படுத்துபவர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க இத்தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக Zon Tengah B நெடுஞ்சாலை நடவடிக்கை பிரிவு அதிகாரி ஏ.எஸ்.பி அமீர் செ யா தெரிவித்தார்.
"அதன் அமலாக்கம் 19ஆம் தேதி தொடங்குகிறது. காலையில், காலை 6.30 மணி தொடங்கி 9.30 மணி வரை மற்றும் மாலையில், 4.30 மணி தொடங்கி 7.30 மணி வரை அமல்படுத்தப்படும். இன்று போக்குவரத்து சீராக இருந்ததை எங்களின் கண்ணோட்டத்தில் காண முடிந்தது. போக்குவரத்து நெரிசல் 30 விழுக்காடு குறைத்துள்ளது,'' என்றார் அவர்.
இன்று, ELITE நெடுஞ்சாலையில் பிளஸ் மலேசியா நிறுவனம் மற்றும் சாலை போக்குவரத்து துறையுடன் மேற்கொண்ட கண்ணோட்டத்திற்குப் பின்னர் ஏ.எஸ்.பி அமீர் செ யா இவ்வாறு தெரிவித்தார்.
2 மற்றும் 3ஆவது வகுப்பு வாகனங்களை உட்படுத்திய அத்தடை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய அமலாக்கத் தரப்பு அவ்வப்போது கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.


