ஷா ஆலம், பிப். 20 - இல்திசாம் சிலாங்கூர் சேஹாட் (ஐ.எஸ்.எஸ்.) திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவிருக்கும் டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கான சலுகைகளை முறைப்படுத்தும் பணியின் இறுதி கட்டத்தில் மாநில அரசு உள்ளது.
முன்பு பந்துவான் சேஹாட் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் இருந்த இந்த சிகிச்சை திட்டம், இப்போது 10,000 வெள்ளி வரை சிகிச்சைக்கான உதவியை வழங்கும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
டயாலிசிஸ் சலுகை சீரமைப்பின் வழி தகுதியுள்ள நோயாளிகள் 10,000 வெள்ளி வரை சிகிச்சைக்கான உதவியை பெற முடியும். முன்பு இந்த உதவித் தொகை 5,000 வெள்ளியாக மட்டுமே இருந்தது என அவர் குறிப்பிட்டார்.
தற்போது, ஐ.எஸ்.எஸ். திட்டத்தின் கீழ் அடிப்படை சிகிச்சை உதவி வரம்பு ஒரு தடவைக்கு 70 வெள்ளியாகும் என்று நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஐ.எஸ்.எஸ். திட்டத்தில் முன்மொழியப்பட்ட மேம்பாடுகள் குறித்து செலாட் கிள்ளான் உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷீட் அசாரி எழுப்பிய கேள்விக்கு ஜமாலியா இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், செல்கேர் மேனேஜ்மென்ட் சென். பெர்ஹாட், குழும கிளினிக்குகளில் அடிப்படை சிகிச்சைகளுக்கான விலைக் கட்டுப்பாட்டு சீரமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜமாலிமா கூறினார்.
ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, சிகிச்சை கட்டணங்கள் பயனாளிகளுக்கு நிதி ரீதியாக சுமையாக இல்லாதிருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.
கடந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி 2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது ஐ.எஸ்.எஸ். திட்டத்தை தொடர இரண்டு கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.


