கோலாலம்பூர், பிப். 20 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாநிலங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இரவு 8.30 மணி நிலவரப்படி அதிகரித்துள்ளது.
பகாங் மாநிலத்தின் பெந்தோங் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேராக உயர்ந்துள்ளது. நேற்று பிற்பகலில் இந்த எண்ணிக்கை 31 குடும்பங்களைச் சேர்ந்த 111 பேராக மட்டுமே இருந்தது.
பாதிக்கப்பட்ட 78 பெரியவர்கள், 38 சிறார்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும காராக் தேசிய பள்ளியில் செயல்பட்டு வரும் தற்காலிக நிவாரண மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையின் இன்ஃபோ பெஞ்சானா அகப்பக்கம் கூறியது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 குடும்பங்களைச் சேர்ந்த 110 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை 11 குடும்பங்களைச் சேர்ந்த 51 நபர் மட்டுமே தங்கியிருந்தனர்.
கிளாவாங் மற்றும் செனாவாங்கில் வெளியேற்றப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக டேவான் டி'சூரியில் ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளதாக ஜெலுபு மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் முகமது நஜிப் அப்துல் கரீம் தெரிவித்தார்.
தற்போது வானிலை தெளிவாக உள்ளது. மழையும் நின்றுவிட்டது. இருப்பினும், அருகிலுள்ள ஆறுகளில் நீர் மட்டத்தை எங்கள் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கைகளில் 17 சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், 10 தீயணைப்பு வீரர்கள், 13 காவல்துறை அதிகாரிகள், ஐந்து ஜே.கே.எம் ஊழியர்கள் மற்றும் அரச மலாய் படைப்பிரிவின் எட்டு உறுப்பினர்கள் ஈடுபட்டதாக நஜிப் மேலும் கூறினார்


