ஜோர்ஜ் டவுன், பிப். 20 - கம்மி எனப்படும் எளிதில் ஒட்டிக் கொள்ளும்
தன்மை கொண்ட பிசின் போன்ற மிட்டாய் தொண்டையில் சிக்கியதால்
நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் இங்குள்ள பினாங்கு
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பட்டர்வெர்த், பத்து டுவா தேசிய பள்ளியில் பயின்று வரும் முகமது
பாஹ்மி ஹபிஷ் முகமது பக்ருடின் என்ற அந்த பத்து வயது மாணவன்
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு அல்-குர்ஆன் மற்றும் சமய வகுப்புக்குச்
செல்வதற்கு முன் பள்ளிக்கு வெளியே விற்கப்பட்ட அந்த மிட்டாயை
வாங்கி உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்ட நிலையில் சுவாசிப்பதில்
சிரமத்தை எதிர்நோக்கிய அம்மாணவன் ஆசிரியரை நோக்கிச் சென்ற
போது மயங்கி விழுந்ததாக அச்சிறுவனின் உறவினரான சித்தி ஃபர்ஹானி
முகது பிக்ரி (வயது 33) கூறினார்.
பள்ளி ஆசிரியை ஒருவர் அம்மாணவனின் முதுகில் தட்டி மிட்டாயை
வெளியே எடுக்க முயன்றுள்ளார் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு
மருத்துவப் பணியாளர்கள் சி.பி.ஆர். முதலுதவியை வழங்கினர் என்று
அவர் சொன்னார்.
அந்த மிட்டாய் அச்சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக
மருத்துவர்கள் கூறினர். அவரின் அவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதோடு
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உடலில் நீலம் படர்ந்துள்ளது என்று
அவர் குறிப்பிட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவனின் உடல்
நிலை அபாய கட்டத்தில் உள்ள நிலையில் மருத்துவர்கள் நிலைமையை
அணுக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்.
நீண்ட நேரத்திற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியதால் அச்சிறுவனின்
மூளை பாதிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை
நிலைமையைக் கண்காணித்து அதன் பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை
குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று
அவர் மேலும் தெரிவித்தார்.


