குவாந்தான், பிப் 19 – அரசாங்கத்தின் பரிவுமிக்க சியாரா மடாணி திட்டத்தின் கீழ் உதவித் தேவைப்படும் மக்களை நேரில் சென்று கண்டு உதவி வழங்கும் நிகழ்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வரிசையில், குவாந்தான், கம்போங் பாடாங்கில் 15 குடும்ப உறுப்பினர்களை மனத்திடத்தோடு பராமரித்து வரும் தனித்து வாழும் தாயான பத்துமலையானா கணபதிக்கு இத்திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்பட்டது.
துப்புரவுப் பணியாளராக குறைந்த வருமானத்தில், மொத்த குடும்பத்தின் சுமையையும் பத்துமலையான தன் தோளில் சுமந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் பவுஸி, பத்துமலையானா வீட்டுக்கு நேரில் வருகை மேற்கொண்டு நலம் விசாரித்தார்.
அவ்வேளை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் நிதி உதவியும், உணவுக் கூடைகளும் பத்துமலையானாவுக்கு வழங்கப்பட்டன.
சிறிய உதவியாயினும், குடும்பத்தின் சுமையைக் குறைக்க அது துணைப் புரியும் என ஃபர்ஹான் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நல்ல வாழ்க்கைச் சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கும் பத்துமலையானாவுக்கு, இறைவன் அருளால் வலிமைக் கிடைக்கட்டும் என்றார் அவர்.
ஒருவரும் விடுபடக் கூடாது என்பதே மடாணி அரசின் கொள்கை என்பதால், தேவைப்படுவோருக்கு இது போன்ற உதவிகள் தொடரும் என அவர் உறுதியளித்தார்.


