கோலாலம்பூர், பிப் 19 – 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை, மோசடிகள் தொடர்பான 51,965 அழைப்புகள் உட்பட மொத்தம் 174,410 அழைப்புகளை தேசிய மோசடி உதவி மையம் (NSRC) பெற்றுள்ளது.
பேங்க் நெகாரா மலேசியாவின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த வழக்குகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட மொத்த இழப்புகள் 396.85 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
மேலும், மோசடி நடவடிக்கையின்போது மற்றவர்கள் பெயரில் பயன்படுத்தப்பட்ட 139,774 வங்கிக் கணக்குகளும் சிக்கியிருப்பதாக பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகளின் சீரமைப்புக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தெரிவித்திருக்கிறார்.
இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025 பட்ஜெட்டில் அம்மையத்திற்கு அரசாங்கம் 20 மில்லியன் ரிங்கிட்டை மானியமாக ஒதுக்கியுள்ளது .
இந்த நிதியுதவி இணைய மோசடிக்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்புகளை விளைவிக்கும் மோசடிகளின் அதிகரிப்பை நிவர்த்தி செய்ய அரசாங்கம் மேற்கொண்ட முன்முயற்சி நடவடிக்கைகள் குறித்து போர்ட்டிக்சன் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அமினுடின் ஹருன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அசாலினா இத்தகவலை வெளியிட்டார்.


