கோலாலம்பூர், பிப் 19 - `MLFF` எனப்படும் விரைவு டோல் கட்டண முறை அமலாக்கம் டோல் கட்டணம் உள்ள நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அமையாது.
இவ்விவகாரம் தொடர்பிலான செலவுகள் மற்றும் நன்மைகள் குறித்து பொதுப்பணி அமைச்சு மற்றும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய கணக்குக் குழுவின் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெரிவித்தார்.
கடந்தாண்டு டிசம்பரில் நியமன ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால், MLFF-இன் இலக்கை பொதுப்பணி அமைச்சு உடனடியாக அமைக்க வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்திற்கும் பயனீட்டாளர்களுக்கும் எவ்வித செலவும் ஏற்படாமல் இருக்கும் வகையில், MLFF-ஐ செயல்படுத்த சிறந்த கொள்முதலை உறுதிப்படுத்த நிதி அமைச்சிடமும் தகுந்த ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இதர நிறுவனங்களுடன் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் இணைந்து, ஒவ்வொரு நெடுஞ்சாலை கட்டண வசூலின் செயல்திறனையும் மேம்படுத்த வேண்டும் என்று மாஸ் எர்மியாத்தி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, MLFF அமைப்பை செயல்படுத்த 346 கோடி ரிங்கிட் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


