கெய்ரோ, பிப். 19- பாலஸ்தீன குடியிருப்பாளர்கள் இடம் பெயராமல் காஸா பகுதியை மறு நிர்மாணிப்பு செய்யும் திட்டம் குறித்து விவாதிக்க எதிர்வரும் மார்ச் 4 ஆம் தேதி அவசர அரபு உச்சநிலை மாநாட்டை நடத்தப்போவதாக எகிப்து கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இந்த உச்சநிலை மாநாடு பிப்ரவரி 27 அன்று நடைபெறத் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்கு ஏதுவாக மார்ச் 4 ஆம் தேதிக்கு அது ஒத்திவைக்கப்பட்டது என்று எகிப்திய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அரபு லீக்கின் தற்போதைய தலைவர் என்ற முறையில் பாஹ்ரினுடன் இணைந்து அரபு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
காஸாவை தங்கள் வசப்படுத்தி பாலஸ்தீனர்களை வேறு பகுதிகளுக்கு மாற்றுவதற்கான அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது. காஸாவை "மத்திய கிழக்கு ரிவியரா"வாக மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தை டோனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.
பாலஸ்தீனர்களை இட மாற்றம் செய்யாத வகையிலான ஒரு விரிவான காஸா மீட்புத் திட்டத்தை தனது நாடு உருவாக்கி வருவதாக எகிப்திய அதிபர் அப்டில் ஃபத்தா அல்-சிசி கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
பாலஸ்தீனர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான டிரப்ம்பின் முன்மொழிவை அரபு உலகமும் பல நாடுகளும் நிராகரித்தன. அதனை ஒரு வகையான இன அழிப்பு என அவர்கள் வர்ணித்தனர்.
கடந்த ஜனவரி 19 முதல் காஸாவில் அமலில் இருந்து வரும் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் இந்த சர்ச்சைக்குரிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


