NATIONAL

சட்டமன்ற விருந்து நிகழ்வில் சுல்தான் ஷராபுடின், தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் பங்கேற்றனர்

19 பிப்ரவரி 2025, 2:31 AM
சட்டமன்ற விருந்து நிகழ்வில் சுல்தான் ஷராபுடின், தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் பங்கேற்றனர்

ஷா ஆலம், பிப். 19 - சிலாங்கூர் மாநில 15வது சட்டமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை முன்னிட்டு நேற்றிரவு  நடைபெற்ற இரவு விருந்தில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரச தம்பதியருடன்  சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டார். அரச குடும்பத்தினரை   மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சிலாங்கூர் மாநில அரசு  செயலாளர் டத்தோ அகமது ஃபாட்ஸ்லி அகமது தாஜூடின் ஆகியோர் வரவேற்றனர்.

ஹன்சார்ட் எனப்படும் சட்டமன்ற விவாதங்களின் எழுத்துப்பூர்வ வடிவத்தின்  மின்னியல் முறையிலான தேடலை உருவாக்குவதன் மூலம் சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சிலாங்கூர் சட்டமன்ற அலுவலகம் மேம்படுத்தியுள்ளது என்றும் இது விரைவானது மற்றும் பயனர்களுக்கு  நட்புறவானது என்றும் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் தமது உரையில் கூறினார்.

முன்னர் செயல்படுத்தப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் மற்றும் மாநிலச் சட்டங்களுக்கான   தேடல் அமைப்பின் தொடர்ச்சியாக இது அமைகிறது.

இந்த அகப்பக்கம் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஊடாடும் தன்மை கொண்டதாகவும் அனைவரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதற்கு ஏதுவாக  அவ்வப்போது இதுபோன்ற மேம்பாடுகள் செய்யப்படும் என்று அவர்  கூறினார்.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது  அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை மற்றும் ஆடைக் கட்டுப்பாடுகள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் நினைவூட்டினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில்  நாம் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.   பல்வேறு டிஜிட்டல் தளங்களில் நேரடி ஒளிபரப்புகள் மூலம் கூட்டத் தொடரை   நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சிலாங்கூர் குடிமக்களுக்கு கிடைப்பதால் நாம் பொறுப்பை  உணர்ந்து உயர்நெறியுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எனவே, பொதுமக்களுக்கு பயனளிக்கும் மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்தின் வெற்றிக்கு  உதவக்கூடிய விஷயங்களைத் தெரிவிப்பது நமது பொறுப்பாகும் என்றும் லாவ் கூறினார்.

மாநில சட்டமன்றக் கூட்டம் நேற்று தொடங்கி பிப்ரவரி 21 வரையிலும் பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரையிலும்  நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.