NATIONAL

உற்சாகத்துடன் கல்வி தவணையைத் தொடங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

18 பிப்ரவரி 2025, 9:38 AM
உற்சாகத்துடன் கல்வி தவணையைத் தொடங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

கோலாலம்பூர், பிப் 18 - நீண்ட விடுமுறைக்கு பிறகு, 2025 / 2026-ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணையை மாணவர்கள் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர்.

சிலாங்கூர், பந்திங், தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டில் 84 மாணவர்களும், பாலர் பள்ளியில் 71 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மொத்தம் 560 மாணவர்களைக் கொண்டு இவ்வருடத்திற்கான பள்ளி தவணையைத் தொடங்கியுள்ளதாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் கணேஷ் இராமசாமி கூறினார்.

"ஆக, இந்த பள்ளியைப் பொருத்தவரையில் கடந்த நான்கு ஆண்டுகளை விட இந்த ஆண்டே அதிகமான மாணவர்கள் பாலர் பள்ளியிலும் முதலாம் ஆண்டிலும் பதிவுச் செய்திருக்கின்றார்கள்", என அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் இயக்கத்தின் வழி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இப்பள்ளியில் மொத்தம் 40 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இதனிடையே, ஜோகூர், தங்காக்கில் உள்ள ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளியில் 30 மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், 22 மாணவர்கள் பாலர் பள்ளியிலும் கல்வி கற்கத் தொடங்யுள்ளனர்.

198 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், 24 ஆசிரியர்கள் பணிபுரிவதாக தலைமையாசிரியர் கந்தசாமி சுப்ரமணியம் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், நெகிரி செம்பிலான், பகாவில் அமைந்துள்ள சியாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 12 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பயிலத் தொடங்கியதாக அதன் தலைமையாசிரியை உமா சுப்ரமணியம் கூறினார்.

"தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்ற அடிப்படையில், சியாலாங் தோட்ட தமிழ்ப்பள்ளியைத் தேர்வு செய்து கல்வி கற்க பிள்ளைகளை அனுப்பி வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு முதலில் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்", என்றார் அவர்.

பத்து ஆசியர்களின் வழிக்காட்டலுடன், இப்பள்ளியில் 94 மாணவர்கள் பயில்வதாக தலைமையாசிரியை உமா சுப்ரமணியம் கூறினார்.

இதனிடையே, பகாங், கோலா லிபிஸ்சில் செயல்படும் பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், 5 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர்.

மொத்தம் 39 மாணவர்களுடன், இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிவதாக தலைமையாசிரியை உமாதேவி மணியம் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து வசதி சிரமமாக இருந்தாலும், குறைவான மாணவர்களுடன் செயல்படும் பேராக் தெலுக் இந்தான், செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் கடப்பாட்டுடன் பணியாற்றுகின்றனர்.

"இந்த பள்ளிக்கு வருவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. அதாவது சாலை மற்றும் படகு வழியாக வரலாம். தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள சாலை மேடு பள்ளமாக இருக்கும்.

படகு வழியாக வருபவர்கள் ஏறக்குறைய காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் படகை எடுத்தாக வேண்டும். காலையில் படகை எடுத்துக் கொண்டு தெலுக் இந்தான் நகரத்திலிருந்து இங்கு வந்தடைய ஏறக்குறைய பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். சாலை வழியாக வந்தால் ஏறக்குறைய 45 நிமிடங்கள் எடுக்கும்", என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு இப்பள்ளியில் ஒரே மாணவர் மட்டுமே முதலாம் ஆண்டில் பயில தொடங்கியுள்ளார். இப்பள்ளியில் மொத்தம் 10 மாணவர்கள் பயில, 6 ஆசிரியர்கள் பணிப்புரிகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.