கிள்ளான், பிப். 18 - செத்தியா ஆலமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர், இரண்டு நாட்களுக்கு முன்பு பூலாவ் கெத்தாமிற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு ஐந்து குற்றங்களைப் புரிந்துள்ளதாக சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
'ஆ பாய்' என்று அழைக்கப்படும் அந்த சந்தேக நபர் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு நிகழ்ந்த சம்பவத்திற்குப் பிறகு முதலில் மலாக்காவிற்கு தப்பிச் சென்று பின்னர் இ-ஹெய்லிங் மற்றும் லோரி ஓட்டுநர்களை மிரட்டியும் மோட்டார் சைக்கிள்களைத் திருடியும் சிலாங்கூருக்குத் திரும்பியுள்ளார்.
அவர் கூறினார்.
பேரங்காடி துப்பாக்கிச் சூட்டுச் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் கிள்ளானிலிருந்து மலாக்காவுக்கு தப்பிச் சென்று அங்கு ஐந்து நாட்கள் இருந்தார். பின்னர் பந்திங் திரும்பிய அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் சபாக் பெர்ணமில் காணப்பட்டார்.
சபாக் பெர்ணமிலிருந்து பூலாவ் கெத்தாம் தப்பிச் செல்வதற்கு முன்பு ஒரு வீட்டை சூறையாடும் குற்றத்தையும் அவர் புரிந்துள்ளார். இவற்றுடன் சேர்த்து அவ்வாடவர் புரிந்த மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 15 ஆனது என்று இன்று புலாவ் கெத்தாம் படகுத் துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹூசேன் கூறினார்.
கடந்த 2014 முதல் தீவிரமாக குற்றங்களைச் புரிந்து வந்த சந்தேக நபர், கொள்ளை தொடர்பில் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரும்பாலான குற்றங்களை தனியாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் மேற்கொண்டு வந்த அவ்வாடவர் கடந்தாண்டு முதல் துப்பாக்கிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என ஹூசேன் குறிப்பிட்டார்.
வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு அவர் பூலாவ் கெத்தாமை ஒரு இடை மாற்று இடமாகப் பயன்படுத்தினாரா என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். மேலும் அவருக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
செத்தியா ஆலம் பேரங்காடி துப்பாக்கிச் சூடு குறித்து கருத்துரைத்த ஹூசேன், அங்கு சந்தேக நபர் கொள்ளையிடத் திட்டமிட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை தனது தரப்பு நிராகரிக்கவில்லை என்று கூறினார்
இன்று காலை புலாவ் கெத்தாமில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்குள் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 வயது சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஹூசேன் முன்னதாக உறுதிப்படுத்தினார்


