ஷா ஆலம், பிப். 18 - குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் முக்கிய
இடங்களில் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை (சி.சி.டி.வி.)
பொருத்துவதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும்படி
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்
வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் பொது பாதுகாப்பு நிலை குறித்து தனது கவலையை
வெளிப்படுத்திய அவர், மாநிலம் முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்ய
எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி காவல்துறை, தீயணைப்புத் துறை
உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
குற்றச் செயல்களை விரைந்து கண்டறிவதற்கு ஏதுவாக வியூக
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அதிகமான கண்காணிப்பு
கேமராக்களை பொருத்தும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.
சிலாங்கூரில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தங்களின் பணியின் போது
கூடுதல் பட்ச விழிப்பு நிலையில் இருக்கும்படி போலீஸ் மற்றும் காவல்
துறையை வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று 15வது சட்டமன்றத்தின்
மூன்றாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை தொடக்கி
வைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி செத்தியா ஆலமில் உள்ள பேரங்காடி ஒன்றில்
அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவனால் துப்புரவுப் பணியாளர்
சுடப்பட்டச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சுல்தான் இந்த ஆலோசனையை
வழங்கினார்.


