ஷா ஆலம், பிப். 18 - நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும்
மேம்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறிந்து
அவற்றுக்கு அரசின் வாயிலாக தீர்வு காணும் நோக்கில் ஜெலாஜா மடாணி
எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத் திட்டத்தின் கீழ் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்
சிறப்பு பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் ஆலய நிர்வாகத்தினரைச் சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி கெடா மாநிலத்தின் கோல கெடா
மற்றும் அலோர்ஸ்டாரில் உள்ள ஆலயப் பொறுப்பாளர்களைச் சந்தித்த
அவர், இம்மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஜோகூர் மாநிலத்தின்
ஜோகூர் பாரு, பத்து பகாட், பாகோ, மூவார் ஆகிய பகுதிகளிலுள்ள
ஆலயங்களின் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
இவ்விரு பயணங்களின் போதும் மொத்தம் 15 ஆலயங்களின்
பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்தப்பட்டது. ஆலயங்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் வீடமைப்பு மற்றும்
ஊராட்சித் துறை அமைச்சின் ‘ரிபி‘ எனப்படும் முஸ்லீம் அல்லாத
வழிபாட்டுத் தலங்களுக்கான புரனமைப்பு திட்டம் பற்றியும் ஆலயப்
பொறுப்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நிதிப் பற்றாக்குறை, நுட்பப் பிரச்சனைகள் மற்றும் உதவிக்கு விண்ணப்பம் செய்து தொடர்பான குழப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆலயங்கள்
எதிர்நோக்கி வருவது இப்பயணத்தில் கண்டறியப்பட்டதாக சண்முகம்
குறிப்பிட்டார்.
இதனைக் கருத்தில் கொண்டு நேரடியாக களத்தில் இறங்கி, உதவிக்கான
வாய்ப்புகள் குறித்து அறிந்திராத மற்றும் விண்ணப்ப நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க நாங்கள் முடிவெடுத்தோம் என அவர் சொன்னார்.
ஒவ்வொரு ஆலயமும் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி
ஒருமைபாட்டு மற்றும் கலாசார மையமாகவும் விளங்குவது உறுதி
செய்யப்பட வேண்டும். அதன் மூலமாகவே ஆலயங்கள் ஆற்றலின்
அடையாளமாகவும் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்க
முடியும் என்றார் அவர்.
உண்மையான மேம்பாடு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் வாயிலாக
பிறக்கிறது என்பது மடாணி அரசாங்கம் என்ற முறையில் எங்களின்
கருத்தாகும். நாம் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து துணை நின்றால்
பொருள் பொதிந்த மாற்றங்களை உருவாக்கலாம் என சண்முகம்
தெரிவித்தார்.


