ஷா ஆலம், பிப். 18 - மாநில வரலாற்றில் மிக அதிகமாக அதாவது 286.7
கோடி வெள்ளியை கடந்தாண்டு வருமானமாக ஈட்டிய டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசுக்கு மேன்மை தங்கிய
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு 361 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரம்
வெள்ளியாக இருந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிதியின் வாயிலாக
மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 51.7 கோடி வெள்ளி அதிகரித்து கடந்தாண்டு
413 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியாக உயர்வு கண்டதையும்
அவர் சுட்டிக்காட்டினார்.
எனது தலைமையிலான அரசாங்கம் 5,000 கோடி வெள்ளி முதலீடுகளை
ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தது. எனினும், 6,675 கோடி வெள்ளி
மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து தொழிற்சாலை, சேவை மற்றும்
முதன்மை தொழில்துறைகளில் தரமான 50,222 வேலை வாய்ப்புகளையும்
உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசின் சிறப்பான அடைவு நிலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கடந்தாண்டு
நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்குரிய
வாய்ப்பினை ஏற்படுத்தியது என்று அவர் சொன்னார்.
மாநில அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று மூன்றாம் தவணைக்கான
மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரை தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
மாநில அரசு அமல்படுத்தும் மேம்பாட்டுத் திட்டங்கள் வருமானத்தை
மட்டும் இலக்காக கொண்டிராமல் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும்
இருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என சுல்தான்
தமது உரையில் கேட்டுக் கொண்டார்.
ஆகவே, அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்கு சிறப்பான
சேவையை வழங்கும் அதேவேளையில் மக்களுக்கு நன்மையையும்
சுபிட்சத்தையும் வழங்கக் கூடிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்து
சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசும் பொதுச் சேவைத் துறையும் தங்கள் பொறுப்புகளை
உயர்நெறி, திறன் மற்றும் போட்டியிடத்தக்க வகையில் மேற்கொள்ள
வேண்டும் என அவர் கூறினார்.


