(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப் 18 - நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 2025
கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை
11,021 பேராக பதிவாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு 11,568 பேராக
இருந்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு
547 மாணவர்கள் குறைந்துள்ளதை இது காட்டுகிறது.
அதிக மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் சேர்ந்த மாநிலங்கள் பட்டியலில்
3,574 மாணவர்களுடன் சிலாங்கூர் முதலிடம் வகிக்கும் வேளையில் மிகக்
குறைந்த அதாவது ஒரே மாணவர் சேர்ந்த மாநிலமாகக் கிளந்தான் உள்ளது.
தமிழ்பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து
வருவதை மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் வெளியிட்டுள்ள மூன்றாண்டு காலத்திற்கான முதலாம் ஆண்டு மாணவர்பட்டியல் காட்டுகிறது.
இந்த பட்டியலின்படி முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2023ஆம் ஆண்டில் 11,712 பேராகவும் 2024ஆம் ஆண்டு
11,568 பேராகவும் 2015ஆம் ஆண்டு 11,021 பேராகவும் உள்ளது.
இந்த எண்ணிக்கை வீழ்ச்சி நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்
மொழியின் எதிர்காலம் குறித்த கவலையை சமுதாயத்தின் மத்தியில்
ஏற்படுத்தியுள்ளது.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் ஜோகூர் (2,013 மாணவர்கள், பேராக் (1,615 மாணவர்கள்), நெகிரி செம்பிலான் (1,036 மாணவர்கள்), கெடா (923
மாணவர்கள்), பினாங்கு (824 மாணவர்கள்), பகாங் (285 மாணவர்கள்),
மலாக்கா (217 மாணவர்கள்), கிளந்தான் (ஒரு மாணவர்) ஆகிய மாநிலங்கள்
உள்ளன.
இதனிடையே, இந்த பட்டியல் திங்கள்கிழமை வரையிலான மாணவர்கள் பதிவை அடிப்படையாகக் கொண்டது என்றும் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் இறுதிப்பட்டியலில் மாணவர் எண்ணிக்கையில் சிறிதளவு மாற்றம் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது பெரிதும் கவலையளிக்கும் வகையில்
உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை கோல சிலாங்கூர்
வட்டாரத்திலுள்ள மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கம்போங் பாரு
தோட்டத் தமிழப்பள்ளி மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் லாடாங் லிமா பெலாஸ் தமிழ்ப்பள்ளியில் முதலாம் வகுப்பில் தலா ஒரு மாணவர்
மட்டுமே சேர்ந்துள்ளதாக சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி
தலைமையாசரியர் சங்கத்தின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.


