அங்காரா, பிப். 17- காஸா பகுதியில் கட்டிட இடிபாடுகளிலிருந்து மேலும் ஒன்பது உடல்களை பாலஸ்தீன மருத்துவ மற்றும் மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன.
இதனுடன் சேர்த்து கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப் படுகொலைப் போரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48,284 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு திங்களன்று தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நான்கு பாலஸ்தீனர்களும் இதில் அடங்குவர் என்றும் அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111,709 ஆக உயர்ந்துள்ளதாக அது கூறியது.
மீட்புக் குழுக்களால் அவர்களை நெருங்க முடியாததால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் தெருக்களிலும் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19 முதல் காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதன் மூலம் பரவலான அழிவை ஏற்படுத்தி பாலஸ்தீனப் பகுதியை நிர்மூலமாக்கிய இஸ்ரேலிய தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
போர் நிறுத்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலியப் படைகளின் போர் நிறுத்த மீறல்கள் குறித்து உள்ளூர் காஸா அதிகாரிகள் கிட்டத்தட்ட தினசரி புகார் அளித்து வருகின்றனர்.
காஸாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்ட் ஆகியோருக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் கைது ஆணையைப் பிறப்பித்தது.
இப்பகுதியில் நிகழ்ந்து வரும் போர் தொடர்பாக இஸ்ரேல் அனைத்துலக நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கையும் எதிர்கொள்கிறது.


