ஷா ஆலம், பிப். 18 - இங்குள்ள செத்தியா ஆலம் வணிக வளாகத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இன்று அதிகாலை கிள்ளான், பூலாவ் கெத்தாமில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
புக்கிட் அமான் மற்றும் சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறையினரின் கூட்டு நடவடிக்கையில் அதிகாலை 3.00 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
ஒரு ஹோட்டல் அறையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையின் போது அவ்வாடவரிடம் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்
போதைப்பொருள் தொடர்பான ஒரு குற்றப் பதிவு மற்றும் கொள்ளை தொடர்பான ஏழு குற்றப் பதிவுகள் உட்பட ஒன்பது குற்றப் பதிவுகளைக் கொண்ட சந்தேக நபர், கடந்த இரண்டு நாட்களாக அந்த ஹோட்டலில் மறைந்திருந்ததாக ஹூசேன் கூறினார்.
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி செத்தியா ஆலமில் உள்ள ஒரு பேரங்காடியில் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் காலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டார். பின்னர் சந்தேக நபர் கார் ஓட்டுநர் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் ஏறி தப்பிச் சென்றார்.
போலீசார் சந்தேக நபரை அடையாளம் கண்டுகொண்டதை உறுதிப்படுத்திய ஹூசேன் அவருக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாகக் கூறினார்.


