கோலாலம்பூர், பிப். 18 - மலேசியாவில் காணப்படும் ஒருங்கிணைப்பும்
பன்முகத்தன்மையும் சமூகங்களுக்கிடையிலான தொடர்பினை
பலவீனப்படுத்தி விடக்கூடாது. மாறாக, சுபிட்சமும் முன்னேற்றமும்
கொண்ட நாட்டின் உருவாக்கத்திற்கு அது பலமாக விளங்க வேண்டும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அரசாங்கச் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ‘பெர்செக்குத்து தம்பா
முத்து‘ என்ற வாசகம் வேறுபாடுகள் தேசத்திற்கு வலுவைக் கொடுக்கும்
நோக்கத்திற்கேற்ப அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் அவர்களின்
நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வேறுபாடுகள் பலவீனப்படுத்தும். வெறுப்புணர்வை உருவாக்குவதற்கும்
அதனைப் பயன்படுத்தலாம். ஆனால் மறைந்த துங்கு அப்துல் ரஹ்மான்
அவர்கள் பன்முகத்தன்மையும் வேறுபாடுகளும் கூடுதல் வலுவைத் தரும்
என்ற நம்பிக்கையை கொடுத்தார்.
நாட்டின் முதலாவது பிரதமர் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.
துங்கு அப்துல் ரஹ்மானைப் போல் அனைத்து இன மக்களின்
இதயங்களையும் தொட்ட தலைவர்கள் யாரும் கிடையாது என்று அவர்
சொன்னார்.
மலாயா கூட்டரசு மாநிலங்கள் நிலையிலும் பின்னர் சபா, சரவா
மாநிலங்களிலும் ஒற்றுமை குறித்து துங்கு தொடர்ந்து வலியுறுத்தி
வந்தார். இதன் காரணமாக அவரின் பன்முகத்தன்மையின் ஒருங்கிணைப்பு
தொடர்பான அறிவிப்புகளை அவை ஏற்றுக் கொண்டன. இதுவே நாட்டின்
கோட்பாட்டின் அடித்தளமாகவும் விளங்கின என்றார் அவர்.
பல்வேறு முதன்மை கோட்பாடுகளின் வாயிலாக துங்கு அப்துல் ரஹ்மான்
நாட்டின் தேசத்திற்கான அடித்தளத்தை இட்டதாகக் கூறிய அன்வார், அந்த
கோட்பாடுகள் இன்றளவும் தற்காக்கப்பட்டு வருகின்றன என்றார்.
நாட்டின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தற்காப்பதில் பல சவால்களை
துங்கு எதிர்நோக்கியதையும் அன்வார் தமது உரையில் நினைவுக்கூர்ந்தார்.


