உலு லங்காட், பிப். 17 - வகுப்பறைகளில் நிலவும் மாணவர்கள் அதிகரிப்பு
பிரச்சினையைக் களைய 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்
புதிதாக 44 பள்ளிகள் நிர்மாணிக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் உகந்த சூழலில் கற்றல்,
கற்பித்தல் நடவடிக்கைளை மேற்கொள்வதை உறுதி செய்யும் கடப்பாட்டை
அரசாங்கம் கொண்டுள்ளதாக கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக்
கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கம் 24
புதிய பள்ளிகளை நிர்மாணித்தது. பள்ளிகளில் நிலவும் மாணவர்
எண்ணிக்கை அதிகரிப்பு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு புதிய
பள்ளிகளை நிர்மாணிக்கும் பணியை அரசாங்கம் தொடர்ந்து
மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.
இது தவிர பள்ளிகளில் அதிகமான கேபின் வகுப்புகளை அமைப்பது
மற்றும் இரு நேர அமர்வு முறையை அமல்படுத்துவது போன்றவை
அமைச்சின் இதர இடையூட்டுத் திட்டங்களில் அடங்கும். சிலாங்கூர்
மாநிலத்தைச் பொறுத்த வரையில் 95 பள்ளிகளில் 31 கேபின் வகுப்புகளை
அமைக்க 6 கோடியே 90 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர்
சொன்னார்.
இவ்வாண்டிற்கான பள்ளித் தவணையின் முதல் நாளான இன்று செமினி,
தாமான் பெலாங்கி தேசிய பள்ளிக்கு வருகை புரிந்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.
இன்று தொடங்கும் புதிய பள்ளித் தவணையில் புதிதாக 17 பள்ளிகள்
செயல்படத் தொடங்கியுள்ளத் தகவலையும் அமைச்சர் வெளியிட்டார்.
அவற்றில் இரு பள்ளிகள் சிலாங்கூர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன
என்றார் அவர்.
இதனிடையே, பள்ளி கட்டிட நிர்மாணிப்பு கைவிடப்படுவது மற்றும்
சுணக்கம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை கல்வி அமைச்சு கடுமையாக
கருதுவதாகவும் அமைச்சர் சொன்னார்.


