கோலாலம்பூர், பிப் 17- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்பட்டிருக்கும் SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறையினால் எஸ்பிஎம் மாணவர்களிடையே இருந்த இடைநிற்றல் பிரச்சனை பல்லாயிரக்கணக்கில் இருந்து தற்போது 8,000-க்கும் மேற்பட்டவர்களாகக் குறைந்துள்ளது
இந்த செயல்முறை ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளியிலிருந்து மாணவர்களின் இடைநிற்றல் அல்லது சாத்தியமான இடைநிற்றல்களைக் கண்டறிய உதவியதாக கல்வி அமைச்சின் நிபுணத்துவ மேம்பாட்டுத் துறையின் கல்வி துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் அசாம் அஹ்மட் தெரிவித்தார்.
இடைநிற்றல் விவகாரங்களை முன்கூட்டியே கண்டறிவதால், முக்கியமான தேர்வுகளில் இருந்து மாணவர்கள் விடுபடுவதைத் தடுப்பதற்கான தலையீடுகளை தேசிய பதிவுத் துறை, ஜேபிஎன் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளுடன் இணைந்து அமைச்சு மேற்கொள்ளலாம்.
B40 பிரிவு அல்லது வறிய நிலையில் உள்ள மாணவர்கள், `Ziarah Cakna` போன்ற ஆலோசனை உதவிகளைப் பெறுவதை உறுதி செய்ய, இந்த செயல்முறை கல்வி அமைச்சுக்கு உதவுவதாக டாக்டர் முஹமட் அசாம் கூறினார்.
"தலையீட்டு நடவடிக்கை மூலமாக, இடைநிற்றல் செய்யக்கூடிய மாணவர்கள் குறித்த தகவல்களை இதுவரை நாங்கள் பள்ளிகளில் இருந்து பெற்றுள்ளோம்.
நிதிச் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு, நம்மிடம் 18 வகையான உதவிகள் உள்ளன. நிதி மற்றும் பிற பிரச்சனைகளால், இடைநிற்றல் செய்யும் மாணவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். கல்வியமைச்சின் கீழ் ஜேபிஎன், பிபிடி ஆகியவை இணைந்து மாணவர்களின் நிலைப்பாடு குறித்து காரணங்களைக் கண்டறிந்துள்ளது," என்றார் அவர்.
இதனிடையே, SiPKPM திட்டத்தின் வழியாக 2024-ஆம் ஆண்டில், 883 ஆரம்ப பள்ளி மாணவர்களும் 1,990 இடைநிலைப் பள்ளி மாணவர்களும் மீண்டும் கல்வி கற்பதற்கு பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


