கோலாலம்பூர், பிப். 17- ஆசியான் அமைப்பின் 2025ஆம் ஆண்டிற்கான
தலைவர் என்ற முறையில் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க மலேசியா
தெளிவுடனும் முழு நம்பிக்கையுடன் தயாராகி விட்டது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இருப்பினும், தலைமைத்துவப் பொறுப்பு அரசாங்கத்தை மட்டுமே சார்ந்தது
அல்ல எனக் கூறிய அவர், உள்ளடங்கிய, நீடித்த மற்றும் ஆக்கத்திறன்
கொண்ட எதிர்காலத்தை உருவாக்க வர்த்தக சமூகம், கல்விமான்கள்,
தொழில்முனைவோர் மற்றும் சிவில் சமூகமும் முக்கியப் பங்கினை
ஆற்ற வேண்டும் என்றார்.
ஆசியானுக்கு தக்க தருணம் வாய்த்து விட்டது. அனைத்து மக்களின்
சுபிட்சமான எதிர்காலத்தை உறுதி செய்ய நாம் ஒன்றுபட்டு உயரிய
நோக்கங்களுன் விரைந்து செயல்பட வேண்டும். குறுகிய கால
சிந்தனைக்கான நேரம் இதுவல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு தென்கிழக்காசியா மீதான 20215 சீனா மாநாட்டைத் தொடக்கி
வைத்து முக்கிரை உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு சொன்னார்.
இந்த நிகழ்வில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர்
டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ், பேங்க் நெகாரா கவர்னர் டத்தோஸ்ரீ
அப்துல் ரஷிட் காபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசியானில் முக்கியப் பங்கினை வகிப்பதிலும் சீனாவுடன்
ஒத்துழைப்பதிலும் மலேசியா தீவிரமாக செயல்பட்டு வரும் வேளையில்
இந்த தொலைநோக்கு இலக்கை அடைவதில் அனைத்துத் தரப்பினரும்
தங்கள் பங்கினை ஆற்ற வேண்டும் என அன்வார் கேட்டுக் கொண்டார்.
நம்பிக்கை, புத்தாக்கம், கூட்டு அபிலாஷைகள் அடிப்படையில்
எதிர்காலத்தை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள்
என அவர் அழைப்பு விடுத்தார்.


