புதுடில்லி, பிப். 17 - இந்தியத் தலைநகர் புதுடில்லி மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரப் பகுதிகளில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 5.36 மணிக்கு ஏற்பட்ட இநநிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளி நோக்கி ஓடினர்.
புதுடில்லியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்று இந்திய தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் பதிவில் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் தூங்கிக் கொண்டிருந்த மக்களை உலுக்கியது. பூமியின் அதிர்வு அலை போல் இருப்பதை உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.
தலைநகர் புதுடில்லி 3 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
டில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கும் அதேவேளையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் சாத்தியமான பின்அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்த பூகம்பத்தில் சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.


