பெந்தோங், பிப். 17 - விபத்தில் சிக்கியவருக்கு உதவ முயன்ற ஆடவர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்த காரினால் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் (கே.எல்.கே.) 69.2வது கிலோமீட்டரில் நேற்று நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததாகப் பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைஹாம் முகமது கஹார் கூறினார்.
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த காரிலிருந்தவர்களுக்கு உதவுவதற்காக அந்தப் பகுதியில் பயணித்த பல வாகனங்கள் அங்கு நின்றன.
அங்கு சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் சாலைப் பயனர்கள் சிலர் ஈடுபட்டிருந்தபோது ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சம்பவ இடத்திலிருந்த இருவர் மீது மோதியது என்று அவர் கூறினார்,
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்ததாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொள்கிறது என அவர் கூறினார்.


