உலு லங்காட், பிப். 17- இவ்வாண்டிற்கான பள்ளித் தவணை இன்று தொடங்கும் நிலையில் புதிய அமர்வை ஆய்வு செய்வதற்காக கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் இங்குள்ள செமினி, தாமான் பெலாங்கி புதிய தேசிய பள்ளிக்கு இன்று வருகை புரிந்தார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநில துணை காவல்துறைத் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி, சிலாங்கூர் மாநில கல்வி இயக்குநர் டாக்டர் ஜாஃப்ரி அபு, துணைத் தலைமை கல்வி இயக்குநர் டாக்டர் நோர் முகமது அசாம் அகமது மற்றும் துசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹன் அப்துல் அஜீஸ் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
பள்ளியில் சுமார் 45 நிமிடங்களைச் செலவிட்ட அமைச்சர் ஃபாட்லினா, முதலாம் ஆண்டு மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவினார்.
பின்னர் அவர் வகுப்பறைகளை ஆய்வு செய்ததோடு குறைந்த வருமானம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக துன் ஹுசைன் ஒன் ஆசிரியர் அறக்கட்டளை மூலம் 3,000 வெள்ளி ரொக்க நன்கொடையை தலைமை ஆசிரியர் நூர் ஹனானி முகமது நஃபியிடம் வழங்கினார்.
இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பூர்த்தியடைந்து இன்று செயல்படத் தொடங்கிய இப்பள்ளியில் பாலர் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை 1,005 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பாட்லினா தெரிவித்தார்.
பள்ளியின் முதல் நாளில் பள்ளி சூழலை நிறைவு செய்வதில் உள்ள பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதனை வெற்றிகரமாக மேற்கொண்ட பள்ளியின் முயற்சிகளுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.


